இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 10 பேர் கைது
நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இலங்கைக்கு அருகே தென்கிழக்கு வங்கக் கடலில் ஏற்பட்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த ஒரு வாரமாக ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்குச் செல்ல அனுமதிச் சீட்டு வழங்கப்படவில்லை. இதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.
இந்நிலையில், நேற்று முன்தினம் வானிலை இயல்பு நிலைக்குத் திரும்பியதைத் தொடர்ந்து நேற்று ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் 2 ஆயிரம் பேர் 400-க்கும் மேற்பட்ட படகுகளில் கடலுக்குச் சென்றனர்.
நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தென்னரசு என்பவருக்குச் சொந்தமான விசைப்படகை சுற்றிவளைத்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி படகில் இருந்த மீனவர்கள் ஜார்ஜ், சுதன், கனகராஜ் சுமித், பரலோகராஜ், கோபி, ஆரோக்கிய ரூபட், பிரேம்குமார், தினேஷ், ராஜேஸ் ஆகியோரைக் கைது செய்தனர்.
பின்னர் அவர்களை காரைநகர் கடற்படை முகாமுக்குக் கொண்டு சென்று, இலங்கை மீன்வளத் துறையினரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து, கைது செய்யப்பட்ட மீனவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.