''இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவு'' - 64 வயது மூதாட்டியின் உடல் உறுப்புகள் தானம்

''இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவு'' - 64 வயது மூதாட்டியின் உடல் உறுப்புகள் தானம்

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவடைந்த 64 வயது மூதாட்டியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள நந்தவனப்பட்டியை சேர்ந்தவர் தேவ மனோகரி (64). இவர் கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி அன்று இரவு சாத்தூரில் உள்ள முத்தூட் பேங்க் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் மோதியதில், கீழே விழுந்த அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து சிகிச்சைக்கு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இதன் பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை அவசர விபத்து சிகிச்சை பிரிவில் உள்நோயாளியாக கடந்த டிசம்பர் 14 ம் தேதி சேர்க்கப்பட்டார். அங்கு தலைக்காய சிகிச்சை பிரிவில் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை தேவ மனோகரி மூளைச்சாவு அடைந்தார்.‌

இதுதொடர்பாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் அருள் சுந்தரேஸ் குமார் கூறுகையில், ''மூளைச்சாவடைந்த தேவ மனோகரியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய உறவினர்கள் முன்வந்த நிலையில் அவரது கணவர் ஆவுடையப்பனிடம் ஒப்புதல் பெறப்பட்டது. இதையடுத்து கல்லீரல் திருச்சியில் உள்ள அப்பலோ சிறப்பு மருத்துவமனைக்கும், திருச்சி டாக்டர் முருகன் ஹெல்த் கேர் மருத்துவமனை, திருச்சி காவேரி மருத்துவமனை ஆகியவற்றிற்கு தலா ஒரு சிறுநீரகம் வழங்கப்பட்டன. அவரது கருவிழிகள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு தானமாக பெறப்பட்டுள்ளன.

மூளைச்சாவடைந்த தேவ மனோகரி

தீவிர விபத்து சிகிச்சைப் பிரிவில் உடற்கூராய்வு செய்யப்பட்டு உரிய மரியாதையுடன் அவரது குடும்பத்தாரிடம் காவல்துறையின் மூலம் உடல் ஒப்படைக்கப்பட்டது. மேற்கண்ட நோயாளியின் உறவினர்கள் மற்றும் காவல்துறைக்கு அரசு ராஜாஜி மருத்துவமனை சார்பாக எங்கள் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். மேற்கண்ட நபரின் உடல் உறுப்பு தானத்தால் 4 நபர்கள் பயன் பெற்றுள்ளனர். உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் இறுதி மரியாதை செய்வதற்காக விருதுநகர் மாவட்ட நிர்வாகத்திற்கு அவரது உடல் உரிய மரியாதையுடன் அனுப்பி வைக்கப்பட்டது'' என்றார்.