டெல்லி கார் வெடிப்பு சம்பவம்: விசாரணை வளையத்தில் மேலும் ஒரு மருத்துவர்!

டெல்லி கார் வெடிப்பு சம்பவம்: விசாரணை வளையத்தில் மேலும் ஒரு மருத்துவர்!

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக ஜம்மு - காஷ்மீரை சேர்ந்த மேலும் ஒரு மருத்துவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டெல்லியில் கடந்த 10 ஆம் தேதி இரவு நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கு விசாரணையை தற்போது தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கையில் எடுத்துள்ளது.

முதற்கட்ட விசாரணையில், காஷ்மீரை சேர்ந்த உமர் நபி என்ற மருத்துவர் அந்த காரை ஓட்டி வந்தது தெரிய வந்தது. அவரும் இந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தததால் இது தற்கொலை தாக்குதலாக இருக்கக் கூடும் என்ற கோணத்தில் என்ஐஏ விசாரணை நடத்தி வருகிறது.

இதனிடையே, கடந்த அக்டோபர் மாதம் ஜம்மு-காஷ்மீர், ஹரியானா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 4 மருத்துவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து சுமார் 2,900 கிலோ வெடிபொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த சூழலில், தற்போதைய டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தின் பின்னணியிலும், உமர் நபி என்ற மருத்துவரே இருப்பதால், மேற்குறிப்பிட்ட வழக்கையும், இந்த வழக்கையும் என்ஐஏ சம்பந்தப்படுத்தி விசாரணை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், மருத்துவர்கள் முசமில் ஷகில், ஆதில் அகமது ராத்தர், பெண் மருத்துவர் ஷாகின் சையது உட்பட 4 மருத்துவர்களிடம் டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சூழலில், காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் தாஜாமுல் அகமது மாலிக் என்பவரை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்குள்ள மகாராஜ் ஹரி சிங் மருத்துவமனையில் அவர் பணியாற்றி வந்துள்ளார். எனினும், அவரிடம் இருந்து கிடைக்கப் பெற்ற தகவல்கள் குறித்து போலீசார் வெளியே கூற மறுத்து விட்டனர். தற்போது அவரிடம் என்ஐஏ அதிகாரிகளும் விசாரணை நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் 5 மருத்துவர்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்படுவது இந்தியாவில் இது முதன்முறை ஆகும்.

முன்னதாக, கடந்த அக்டோபர் மாதம் ஜம்மு காஷ்மீரில் காவல் துறையினரை மிரட்டும் வகையில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் மேற்கொண்ட ரகசிய விசாரணையில் தான், மேற்குறிப்பிட்ட 4 மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர்.