நெல்லை அருகே அக்காவை வெட்டி சாய்த்த தம்பி! நடத்தையில் சந்தேகத்தால் விபரீதம்!

நெல்லை அருகே அக்காவை வெட்டி சாய்த்த தம்பி! நடத்தையில் சந்தேகத்தால் விபரீதம்!

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக உடன்பிறந்த அக்காவை, சொந்த தம்பியே கொலை செய்த சம்பவம் நெல்லையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் தேவர் குளம் பகுதியை சேர்ந்தவர் ராமராஜ் (56). இவருக்கு ராதிகா (28) என்ற மகளும் கண்ணன் (25) என்ற மகனும் உள்ளனர். கண்ணன் தனது தாயுடன் வேலூர் மாவட்டத்தில் தங்கி இருந்து தின்பண்டங்கள் விற்பனை செய்யும் வேலை பார்த்து வந்துள்ளார். இதனால் தேவர் குளத்தில் தந்தை ராமராஜுடன் மகள் ராதிகா மட்டும் வசித்து வந்தார்.

பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்காக கண்ணனும் அவரது தாயும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சொந்த ஊர் வந்திருந்த நிலையில் ராதிகாவின் நடவடிக்கை மற்றும் செயல்பாடுகள் வினோதமாக இருந்ததைக் கண்டு சகோதரர் கண்ணன் சந்தேகம் அடைந்துள்ளார்.

எனவே, ராதிகாவின் செயல்பாடுகள் குறித்து நோட்டமிட்டு வந்துள்ளார். இந்நிலையில் அடிக்கடி ராதிகா, தேவர் குளத்தை சேர்ந்த திருமணமான ஆண் உறவினர் ஒருவருடன் தொலைபேசியில் பேசுவதை கண்டறிந்துளளார். இது தொடர்பாக குடும்பத்தினரிடம் தெரிவித்த அவர், அக்காவிடமும் சண்டையிட்டுள்ளார். ஆனால் அதனைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து தொலைபேசி உரையாடல்கள் நடந்து வந்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த கண்ணன் ராதிகாவிடம் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், நேற்று மீண்டும் சண்டை நடந்துள்ளது. இந்தச் சூழலில் ராதிகாவின் தாய், தந்தையினர் அருகாமையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தனர். அப்போது மீண்டும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கண்ணன் ராதிகாவை கண்டித்த போது தகராறு முற்றி இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

அப்போது கண்ணன் வீட்டில் இருந்த அரிவாளால் ராதிகாவை வெட்டியுள்ளார். இதில் தலையில் படுகாயமடைந்த ராதிகா ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். ராதிகாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக வந்து அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தேவர் குளம் காவல் துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து கண்ணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடன் பிறந்த அக்காவை நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக சொந்த தம்பியே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.