ஓட்டுக்கு யாராவது பணம் கொடுக்காமல் இருக்கிறார்களா? திமுக எம்எல்ஏ பங்கேற்ற நிகழ்ச்சியில் பாக்யராஜ் பேச்சு
தேர்தல் காலம் என்பதால் ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் யாராவது இருக்கிறார்களா என திமுக எம்எல்ஏ பிரபாகர் ராஜா கலந்து கொண்ட நிகழ்ச்சியில் இயக்குநர் பாக்யராஜ் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நூதன பண மோசடி மையமாக கொண்டு "நிர்வாகம் பொறுப்பல்ல" என்ற புதிய திரைப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக விருகம்பாக்கம் எம்எல்ஏ பிரபாகர் ராஜா மற்றும் இயக்குநர் பாக்யராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் படத்தின் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, நடிகர்கள் கீர்த்தீஸ்வரன், இமான் அண்ணாச்சி, பிளாக் பாண்டி, ஆதவன் ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்
நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா பேசுகையில், “இந்த படத்தில் என்னுடைய தந்தை தேவா பாடியுள்ளார் என்பதை சொல்வது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏனெனில் இன்றைக்கு அவருடைய 75-வது பிறந்தநாள். நிர்வாகம் பொறுப்பல்ல திரைப்படக் குழுவினருக்கு என்னுடைய தந்தை சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்“ என்றார்.
விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா பேசுகையில், “அரசியல்வாதிகள், சினிமாக்காரர்கள் முறைகேடுகள் செய்வதாக பல வதந்திகள் கடந்த காலத்தில் இருந்தது. ஆனால் தற்போது அப்படி எதுவும் செய்வதில்லை. இருந்த போதிலும் சோப்பு, ஷாம்பூ போன்றவற்றின் பல முறைகேடுகள் நடக்கிறது. இந்தப் படத்தை பார்க்கக் கூடிய மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. படம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துகள்” என்றார்.
தொடர்ந்து இயக்குநர் கே.பாக்யராஜ் பேசுகையில், “ஊழல் பற்றி பிரபாகர் ராஜா பேசும் போது எனக்கு உண்மையிலேயே சிரிப்பு வந்தது. ஏனெனில் இது தேர்தல் காலம் என்பதால் ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் யாராவது இருக்கிறார்களா? வாங்காமல் யாராவது இருக்கிறார்களா? இதுவே மிகப்பெரிய ஊழல் தானே? இது தேர்தல் நேரம் என்பதால் அதை பற்றி நான் விரிவாக பேச விரும்பவில்லை.
எம்ஜிஆர் உடல்நிலை சரியில்லாத போது நாங்கள் குழுவாக ஐந்து பேர் அமெரிக்கா சென்றிருந்தோம். அப்போது 5 பேரும் வாடகை வண்டியில் தங்கி இருந்த ஓட்டலுக்கு செல்ல வேண்டியிருந்தது. அதற்காக 50 டாலர் என வாடகை வண்டி ஓட்டுநர் தெரிவித்தார். நாங்களும் அதில் ஏறி சென்றுவிட்டோம்.
இறங்கும் போது வாகன ஓட்டுநர் கேட்ட 50 டாலரை எடுத்துக் கொடுத்த போது ஓட்டுனரோ ஒரு ஆளுக்கு 50 டாலர் மொத்தமாக 250 டாலர் கொடுக்க வேண்டும் என எங்களை கட்டாயப்படுத்தினார் நாங்களும் வேறு வழி இல்லாததால் அவர் கேட்ட பணத்தை கொடுத்தோம். அப்போது தான் அமெரிக்காவிலும் இதே போல ஏமாற்று பேர்வழிகள் இருக்கிறார்கள் என தெரிய வந்தது” என்றார்.