திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க கனிமொழி தலைமையில் குழு அமைப்பு; யார் அந்த ஒன்பது பேர்?

திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க கனிமொழி தலைமையில் குழு அமைப்பு; யார் அந்த ஒன்பது பேர்?

சட்டமன்ற தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அக்கட்சியின் எம்பி கனிமொழி தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தமிழகத்தில் உள்ள பெரிய கட்சிகள் தொடங்கியுள்ளன. மாநாடுகள், மாவட்ட, மாநில நிர்வாகிகள் சந்திப்பு என அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.

திமுக எம்பி கனிமொழி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில் அக்கட்சியை சேர்ந்த ஒன்பது பேர் இடம் பெற்றுள்ளனர். முன்னாள் ஆட்சியர் ஜி.சந்தானம், கனவு தமிழ்நாடு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் சம்மந்தம் உள்ளிட்டோரும் அந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு விவரம்

திமுக தேர்தல் அறிக்கை என்பது கடந்த இரண்டு தசாப்தங்களாக அதிக முக்கியத்துவத்தை பெற்று வருகிறது. கடந்த 2006 தேர்தலில் திமுக வெற்றிக்கு அக்கட்சியின் தேர்தல் அறிக்கை முக்கிய காரணமாக கூறப்பட்டது. குறிப்பாக ரூ.2க்கு அரிசி, வண்ணத் தொலைக்காட்சி பெட்டி என பல்வேறு அறிவிப்புக்களை தனது தேர்தல் அறிக்கையில் திமுக அறிவித்திருந்தது. அது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அக்கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தது. அதைத்போலவே கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தலிலும் திமுக தேர்தல் அறிக்கைகள் பேசுபொருளானது. அந்த வகையில் மீண்டும் ஆட்சி அமைத்தே தீர வேண்டும் என்ற திட்டத்தில் இருக்கும் திமுக, இதுவரை அறிவிக்கப்பட்ட தேர்தல் அறிக்கைகளை காட்டிலும் சிறப்பான தேர்தல் அறிக்கையை வெளியிடும் என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.