அதிரும் மேற்கு வங்கம்: ஒரே குடும்பத்தினரிடம் மூன்று நாடுகளின் குடியுரிமை - வெளியான அதிர்ச்சி தகவல்
மேற்கு வங்க மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணி (எஸ்ஐஆர்) ஒருபுறம் மும்முரமாக நடைபெற்றுவரும் வேளையில், அங்குள்ள ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு வங்கதேசம், மியான்மர், இந்தியா என மூன்று நாடுகளில் குடியுரிமை இருப்பது தெரியவந்திருக்கிறது.
தேர்தல் ஆணையம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் எஸ்ஐஆர் பணிகளுக்கு எதிராக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்து வரும் நிலையில், இந்த விவகாரம் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
பீகாரை தொடர்ந்து தற்போது தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் எஸ்ஐஆர் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதற்கு திமுக, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் என பல கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
பாஜகவுக்கு எதிரான சிறுபான்மையினர் வாக்குகளை குறிவைத்து நீக்குவதற்காகவே இந்த நடவடிக்கையில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருவதாக அக்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால், அண்டை நாடுகளில் இருந்து சட்ட விரோதமாக நுழைந்து இந்தியாவில் வசித்து வருவோரை அடையாளம் காணவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஒரே குடும்பம் - மூன்று நாடுகளின் குடியுரிமை
இந்நிலையில், மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆர் தொடர்பான ஒரு விஷயம் தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள தெற்கு 24 பார்கனாஸ் மாவட்டம் காக்த்வீப் பகுதியைச் சேர்ந்த 5 மாத கர்ப்பிணியான கிருஷ்ண தாஸ் என்பவர், மகப்பேறு அட்டையை வாங்குவதற்காக சுகாதார மையத்தை அணுகியுள்ளார்.
அப்போது அவரது ஆவணங்களை சோதனை செய்த அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். காரணம், அந்த பெண் இந்தியாவை சேர்ந்தவரே அல்ல என்பதுதான். விசாரணையில், மியான்மர் நாட்டை சேர்ந்த அப்பெண்ணின் இயற்பெயர் அயே தாண்டர் என்பதும், இரண்டு மாதங்களுக்கு முன்புதான், தனது கணவர் ராம் தாஸுடன் இந்தியாவுக்குள் நுழைந்ததும் தெரியவந்தது.
இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் என்ன தெரியுமா? ராம் தாஸும் இந்தியாவை சேர்ந்தவர் அல்ல. இவர் வங்கதேசத்தை சேர்ந்தவர்.
ராம் தாஸின் பெற்றோரான ராஜு தாஸும், சுமதி தாஸும் வங்கதேசத்தில் இருந்து 15 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவி, மேற்கு வங்கத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர். பின்னர், எப்படியோ வாக்காளர் அட்டையையும், ஆதார் அட்டையையும் பெற்று, இந்திய குடிமக்களாகவே மாறிவிட்டனர்.
இவர்களின் மகன் ராம் தாஸ், வங்கதேசத்தில் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். வேலை விஷயமாக அடிக்கடி மியான்மருக்கு செல்லும்போது அயே தாண்டருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட ராம் தாஸ், மனைவி கர்ப்பமாகி 5 மாதங்கள் ஆன நிலையில், அவரை அழைத்துக் கொண்டு மிசோராம் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்துள்ளார். மனைவியின் பெயரையும் கிருஷ்ண தாஸ் என உள்ளூருக்கு ஏற்ப மாற்றிக் கொண்டார். ஆனால், அவர்கள் இருவரும் வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை பெற்றுக் கொள்ளவில்லை.
'எங்களிடம் எல்லா ஆவணங்களும் உள்ளன'
இதுகுறித்து ராம் தாஸின் தாயார் சுமதி தாஸ் கூறுகையில், "நாங்கள் வங்கதேசத்தில் இருந்து 15 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு வங்கத்துக்கு வந்தோம். எங்களிடம் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டைகள் இருக்கின்றன. எனது மகனும் வங்கதேசத்தில் இருந்து 2 மாதங்களுக்கு அவனது மனைவியுடன் வந்துவிட்டான். அவர்களுக்கு ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை வாங்க விண்ணப்பித்துள்ளோம்" என்கிறார் வெள்ளந்தியாக. தற்போது அவர்கள் அனைவரிடமும் அரசு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திரிணமூல் காங்கிரஸே காரணம் - பாஜக குற்றச்சாட்டு
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பாஜக மூத்த தலைவர் கெளசிக் தாஸ் கூறும் போது, "இது மிகப்பெரிய ஆவண மோசடி. திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஆதரவு இருப்பதால், இதுபோன்ற ஊடுருவல்காரர்கள் வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக் கொண்டு, அரசின் சலுகையையும் வாங்கிக் கொள்கிறார்கள். இதுபோன்ற நபர்கள் எவ்வாறு இந்தியாவுக்குள் ஊடுருவுகிறார்கள் என்பது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும்" எனத் தெரிவித்தார்.
எல்லைப் பாதுகாப்புப் படையே காரணம் - திரிணமூல் காட்டம்
அதே சமயத்தில், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. பாபி ஹல்தாரிடம் இதுபற்றி கேட்டபோது, மத்திய அரசை கடுமையாக சாடினார். அவர் கூறுகையில், "எல்லையை பாதுகாக்க வேண்டியது யார் பொறுப்பு? பிஎஸ்எஃப் என அழைக்கப்படும் எல்லைப் பாதுகாப்புப் படையின் பொறுப்பு. மத்திய உள்துறை அமைச்சகம் நமது எல்லையை சரியாக கண்காணிப்பதில்லை. அதனால்தான், வங்கதேசம், மியான்மரில் இருந்து நம் நாட்டுக்குள் ஊடுருவல்காரர்கள் வருகிறார்கள். எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பை பிஎஸ்எஃப் படையினர் தீவிரப்படுத்த வேண்டும்" எனக் கூறினார்.