'அப்பா பேருக்கு பதில் அம்மா பேர ரேஷன் கார்டில இருந்து எடுத்துட்டாங்க' - அதிகாரியின் அலட்சியத்தால் தவிக்கும் குடும்பம்
தூத்துக்குடி அருகே இறந்த கணவருக்கு பதிலாக உயிருடன் இருக்கும் மனைவியின் பெயரை ரேஷன் கார்டில் இருந்து அதிகாரிகள் நீக்கியதால் ஒரு குடும்பம் வறுமையில் தவித்து வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புதியம்புத்தூர் மேட்டு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி - பேச்சியம்மாள் தம்பதி. இவர்களுக்கு மாரி பிரியா, ஜோதி மீனா என இரண்டு மகள்கள் உள்ளனர். ஜோதி மீனாவிற்கு திருமணம் முடிந்த நிலையில், தந்தை கிருஷ்ணமூர்த்தி சில மாதங்களுக்கு முன்பு கிட்னி பாதிப்பால் இறந்துள்ளார்.
இதனால், பேச்சியம்மாள் மாற்றுத்திறனாளி பெண்ணான மாரி பிரியா (30) உடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், மனைவி பேச்சியம்மாள் அருகே உள்ள நியாய விலை கடையில் ரேஷன் பொருட்கள் வாங்க சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது, கடைக்காரர்கள் பேச்சியம்மாளிடம் உங்கள் பெயர் ரேஷன் கார்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அதனால் அதிர்ச்சியடைந்த பேச்சியம்மாள், ரேஷன் பொருட்கள் வாங்கி கொண்டிருக்கும் போதே எப்படி பெயர் நீக்கம் செய்தீர்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது தங்களுக்கு எதுவும் தெரியாது, நீங்கள் ஓட்டப்பிடாரத்திலுள்ள தாலுகா அலுவலகத்திற்கு சென்று அதிகாரியிடம் கேளுங்கள் என ரேஷன் கடையில் பணியிலிருந்த நபர்கள் கூறியுள்ளனர். அதனால், பேச்சியம்மாள் மற்றும் மற்றொரு மகள் ஜோதி மீனா இருவரும் வட்ட வழங்கல் அலுவலரிடம் இதுகுறித்து கேட்டுள்ளனர். ஆனால், அவர்கள் சரியான பதில் கூறாமல் அலைக்கழித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தன்னுடைய பெயரை எதற்காக நீக்கியுள்ளீர்கள் எனக் கேட்டபோது, நீங்கள் இறந்து விட்டீர்கள் என்று பக்கத்து வீட்டுக்காரர் கூறியதால், நாங்கள் பெயரை நீக்கி விட்டோம். தற்போது உங்களுடைய ரேஷன் கார்டு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ளது. அவர்கள் அனுமதி கொடுத்தால் மட்டுமே உங்கள் பெயரை பதிவு செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளனர். கணவன் இறந்த நிலையில், மனைவியின் பெயரை ரேஷன் கார்டில் இருந்து நீக்கிய அதிகாரிகளின் அலட்சியத்தால், தற்போது ஒரு குடும்பமே நிர்க்கதியாக உள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து மாற்றுத்திறனாளி மகள் மாரி பிரியா கூறும்போது, “ரேஷன் கார்டில் இருந்து அம்மா பெயரை நீக்கி விட்டனர். ஆனால் இறந்தது எனது தந்தை, இதுகுறித்து கேட்டால் தகவல் வந்தது, ஆகவே பெயரை எடுத்தோம் என்கிறார்கள். வாடகை வீட்டில் வசிக்கும் நாங்கள், ரேஷன் பொருட்களை வைத்து தான் வாழ்ந்து வருகிறோம். தாய் பெயரை நீக்கியதால் என்ன செய்வது என்றே தெரியவில்லை. மாற்றுத்திறனாளிக்கு உண்டான தமிழக அரசின் உதவி கூட எங்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை. தயவு செய்து தமிழ்நாடு அரசு எங்களுக்கு உதவி செய்ய முன் வர வேண்டும்” என்று கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்தார்.