100 மீட்டர்... 8.69 விநாடிகள்...! கம்பாலாவில் புதிய சாதனை படைத்த ஸ்வரூப்

100 மீட்டர்... 8.69 விநாடிகள்...! கம்பாலாவில் புதிய சாதனை படைத்த ஸ்வரூப்

கம்பாலா விளையாட்டு போட்டியில் 125 மீட்டர் நீளமுள்ள இலக்கை வெறும் 10.87 விநாடிகளில் கடந்து புதிய சாதனையை மதிகட்டே ஸ்வரூப் என்ற வீரர் படைத்துள்ளார்.

தமிழ்நாட்டின் அடையாளம் என்று போற்றப்படும் ஜல்லிக்கட்டு விளையாட்டைப் போல, கர்நாடகாவின் பாரம்பரியமான விளையாட்டுகளில் ஒன்று கம்பாலா. சேறு நிறைந்த வழியில் இரண்டு எருமை மாடுகளுடன் ஒரு வீரர் ஓடி நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டுவதே கம்பாலா விளையாட்டாகும். இது ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களில் கோலாகலமாக நடத்தப்படுவது வழக்கம்.

அந்த வகையில் மங்களூருவில் உள்ள பாங்கரா குளூர் பகுதியில் நடப்பாண்டிற்கான 'மங்களூரு கம்பாலா' விளையாட்டு கடந்த 27 ஆம் தேதி தொடங்கி நேற்று முடிவடைந்தது. இதன் இறுதி போட்டியில், படகபெட்டு சந்தீப் ஷெட்டியின் எருமைகள் 125 மீட்டர் நீளமுள்ள இலக்கை வெறும் 10.87 விநாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்தன. இதனை 100 மீட்டருக்கான ஓட்டமாகப் பார்க்கும் போது, ​​8.69 விநாடிகளாகக் கருதப்படுகிறது.

இதன் மூலம் மதிகட்டே ஸ்வரூப் கம்பாலா விளையாட்டில் புதிய சாதனையைப் படைத்துள்ளார். முன்னதாக மங்களூருவில் நடைபெற்ற கம்பாலா போட்டியில் ஸ்ரீநிவாச கவுடா என்ற வீரர் 100 மீட்டர் தூரத்தை 8.78 விநாடிகளில் கடந்ததே சாதனையாக இருந்த நிலையில், தற்சமயம் ஸ்வரூப் 100 மீட்டர் தூரத்தை 8.69 விநாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்துள்ளார். இதனையடுத்து விளையாட்டு குழு ஸ்வரூப்பை பாராட்டியதுடன் முதல் பரிசையும் வழங்கி கவுரவித்துள்ளது.

கம்பாலாவில் புதிய சாதனை படைத்த ஸ்வரூப்

இந்த வெற்றி குறித்து பேசிய ஸ்வரூப், "நான் கடந்த மூன்று ஆண்டுகளாகக் கம்பாலா விளையாட்டில் பங்கேற்று வருகிறேன். இதற்கு முன்பு, நான் இளையோர் பிரிவில் பங்கேற்று வந்தேன். இந்த ஆண்டுதான் முதன்முறையாக மூத்தோர் பிரிவில் பங்கேற்றேன். இந்த பிரிவில் நான் மூன்று பந்தையங்களில் விளையாடிய நிலையில், இப்போது இந்த புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளேன். இது ஒரு எதிர்பாராத சாதனை" என்று கூறியுள்ளார்.

இந்த போட்டியில் பங்கேற்ற எருமைகளின் உரிமையாளர் சந்தீப் ஷெட்டி கூறுகையில், "இதே கம்பளப் போட்டியில் கடந்த முறை கயிறு பிரிவில் எங்களது எருமைகள் இரண்டாம் இடம் பிடித்தன. ஸ்வருப் கடந்த ஆண்டு வரை ஜூனியர் பிரிவில் பங்கேற்று வந்தார். இந்த ஆண்டு அவர் சீனியர் பிரிவில் பங்கேற்றார். அவர் மிகவும் திறமையான இளைஞன். மேலும் எனது எருமைகளும் ஸ்வருப்பும் இந்த சாதனைக்குக் காரணமாக இருந்துள்ளனர். இந்தச் சாதனை எதிர்பாராத ஒன்று" என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.