தமிழ்நாட்டில் இதுவரை 18,725 பேருக்கு டெங்கு பாதிப்பு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிர்ச்சி தகவல்!
தமிழ்நாட்டில் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் 18,725 பேர் டெங்கு பாதிப்பிற்கு சிகிச்சை பெற்றுள்ளனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பொது சுகாதாரத் துறையின் மூலம் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில், தேனாம்பேட்டையில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை இயக்குநர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "வடகிழக்கு பருவமழை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த 7ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு துறைகளைச் சே்ர்ந்த 700க்கும் மேற்பட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த 16ஆம் தேதி துவங்கியது.
வடகிழக்கு பருவமழைக் காலத்தில் 87.9 செ.மீ மழை பெய்ய வேண்டும். ஆனால் இதுவரை 24.9 செ.மீ அளவு மழை பெய்துள்ளது. இந்த பருவமழை தொடங்கி 15 நாட்களில் 16,248 மழைக்கால மருத்துவ சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அதன் மூலம் 6 லட்சத்து 78 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். பருவமழை காலங்களில் ஏற்படும் நோய் பாதிப்பில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் கொசு ஒழிப்பு பணியில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 10 ஆயிரம் முதல் 26 ஆயிரம் வரை முகாங்கள் நடத்தப்படும்" என்றார்.
தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு குறித்து பேசுகையில், “டெங்கு பாதிப்புகளை குறைப்பதற்கு தொடர்ந்து மிகத் தீவிரமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பாதிப்பை பொறுத்தவரை கடந்த நான்கரை ஆண்டுகளாக கட்டுக்குள் உள்ளது.
இதுவரை 18,725 பேர் டெங்கு பாதிப்பு ஏற்பட்டு, அவர்களில் 9 பேர் இறந்துள்ளனர். அவர்களுக்கும் இணைநோய் பாதிப்புகள் இருந்துள்ளன. தமிழ்நாட்டில் உள்ள 4755 டெங்கு கண்டறியும் ஆய்வகங்களில், 2 லட்சத்து 52 ஆயிரத்து 738 மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. டெங்கு ஒழிப்பு பணியில் 24 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுப்பட்டுள்ளனர்" என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.
பாம்புக்கடி சிகிச்சை குறித்து பேசிய அவர், "திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் பாம்பு கடிக்கு மருந்து, ASV மருந்துகள், நாய்க்கடிக்கான ARV மருந்துகளும் 2,336 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ளன. மேலும் மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் இந்த ஊசிகளை போடுவதற்கான பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடித்து சிகிச்சைக்கு வந்தவரை மருத்துவர் இல்லாமல் உயிரிழந்த விவகாரத்தில் மருத்துவர், செவிலியர் ஆகிய இருவருமே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அந்த ஆரம்ப சுகதார நிலையத்தில் 2 மருத்துவர்கள் பணியில் உள்ளனர். அப்போது பணியில் இருந்த மருத்துவர் அருகில் உள்ள ஊாில் சிகிச்சை அளிக்க சென்றுள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த செவிலியர் பாம்புக்கடிக்கு ஊசி போடாமல் இருந்துள்ளார். இதனால் அவரையும் சஸ்பெண்ட் செய்ய கூறியுள்ளோம். இது மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பாடமாக இருக்கும்” என்று மா.சுப்பிரமணியன் கூறினார்.