ஓட்டுநர்கள் பேருந்துகளில் செல்போன் பேசக் கூடாது - சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம்
சென்னையில் மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்து ஓட்டுநர்கள் செல்போன் பேசக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
போக்குவரத்து கழக சட்ட விதிகளின்படி செல்போன் பேசிக் கொண்டு வாகனங்களை இயக்கக் கூடாது என்பது முக்கியமானது. ஆனால் சமீபகாலமாக பேருந்து ஓட்டுநர்கள் செல்போன் பேசிக் கொண்டு வாகனங்களை இயக்கி வருகின்றனர். மேலும் பேருந்துகளில் பாட்டு கேட்பதற்காக செல்போனை பயன்படுத்துகின்றனர். இதனிடையே பேருந்துகளை பாதுகாப்பாக இயக்குவதற்கு ஓட்டுநர்களுக்கும், நடத்துநர்களுக்கும், போக்குவரத்து துறை அவ்வப்போது அறிவுரைகளை வழங்கி வருகிறது.
வாகனங்களை ஓட்டும் போது செல்போன் பேசக் கூடாது, மது அருந்தக் கூடாது, பள்ளி மாணவ, மாணவிகளை பாதுகாப்பாக அழைத்து செல்ல வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் பேருந்துகளில் ஏறும் போதும், இறங்கும் போதும் தேவைப்படும் நேரத்தில் மனிதாபிமான முறையில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளை பேருந்தில் கண்ணியத்துடன் நடத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான இருக்கைகளில் அவர்கள் அமர்ந்து பயணிப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
அரசு பேருந்து ஓட்டுநர்கள் சிலர் பேருந்து இயக்கும் போது செல்போனில் பேசுவதாக பல குற்றச்சாட்டுகள் வெளியாகி வருகின்றன. இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஓட்டுநர்கள் பேருந்தை இயக்கும் போது தங்களது செல்போனை நடத்துநர்களிடம் கொடுக்க வேண்டும் என்று மாநகர போக்குவரத்துக் கழகம் மீண்டும் அறிவுறுத்தி உள்ளது.