மேல்மலையனூர் அருகே தம்பதியிடம் பணம் பறிப்பு

மேல்மலையனூர் அருகே தம்பதியிடம் பணம் பறிப்பு

மேல்மலையனூர் அருகே போலீஸ் எனக் கூறி தம்பதியிடம் மர்ம நபர்கள் பணம் பறித்து சென்ற சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகா வளத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் சாமிநாதன். இவர் கடந்த 23-ம் தேதி அதிகாலை 3:35 மணியளவில் தன்னுடைய மனைவியுடன் வெளியூர் செல்வதற்காக அவர்கள் வீட்டுக்கு அருகில் உள்ள வேட்டைக்காரன் பட்டி கூட்ரோடு பேருந்து நிலையம் அருகில் நின்று கொண்டிருந்தனர்.

அப்பொழுது அப்பகுதி வழியே சென்ற ஒருவர் இவர்களை பார்த்தவுடன் உடனடியாக நின்று, நான் போலீஸ் என்றும் நீங்க என்ன கஞ்சா கடத்துறீங்களா? உங்கள் கையில், பாக்கெட்டில் என்ன உள்ளது என்று சோதனை இட்டார் . பின்னர் அவர்களிடம் இருந்து ரூ.10,000 எடுத்துக் கொண்டு மழுப்பலான பதிலை கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த மாதிரியான சம்பவங்கள் மேல்மலையனூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து நடைபெறுவதாக புகார்கள் எழுந்துள்ளன. ஆனாலும் இது தொடர்பாக போலீசார் முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

குறிப்பாக பிக் பாக்கெட், தங்கச் சங்கிலி பறிப்பு, டிராக்டர், இருசக்கர வாகனம், ஆடு, மாடுகள் திருடுதல், கஞ்சா மற்றும் ப்ளாக்கில் சரக்கு விற்றல் உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்கள் அப்பகுதியில் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

பொதுமக்களுக்கு காவல்துறையினர் வேண்டுகோள்:

காவல்துறை என்று சொல்லிக் கொண்டு எவரேனும் சோதனை செய்ய முயன்றால், அவர்களிடம் ஐடி கார்டை கேளுங்கள். உங்களுடைய செல்போனில் அனைத்தையும் வீடியோ ரெக்கார்ட் செய்யுங்கள். மேலும், பக்கத்தில் யாரேனும் இருந்தால் உதவிக்கு அழையுங்கள். இல்லையென்றால் 100க்கு போன் செய்யுங்கள். இப்படி செய்வதால் போலி போலீஸ் என்று கூறுபவர்கள் ஓடிவிடுவார்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தொடர் குற்றச்சாட்டுகள் வரும் பகுதியில் காவல்துறை அதிகாரிகள் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி சந்தேகப்படும் நபர்களை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தால் மட்டுமே பிற்காலத்தில் இது போன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாது என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.