தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடர் மிகவும் முக்கியமானது - முகமது சிராஜ்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சவாலை எதிர்கொள்வதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் கூறியுள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியானது நவம்பர் 14ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், எதிர்வரும் தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரானது தங்களுக்கு மிகவும் முக்கியமானது என்றும், இத்தொடரில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றும் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், "இந்தத் தொடரானது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு மிகவும் முக்கியமான தொடராகும். அதிலும் குறிப்பாக தென்னாப்பிரிக்க அணி நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளது. மேலும் அவர்கள் சமீபத்தில் தான் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. நாங்களும் வெஸ்ட் இண்டீஸ் தொடரை வென்று நல்ல ஃபார்மில் இருகிறோம். இதனால் இந்த தொடரிலும் நாங்கள் சிறப்பாக செயல்படுவோம் என்று நம்புகிறேன்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "தனிப்பட்ட முறையில் எனது பந்து வீச்சில் நான் நல்ல நிலையில் இருப்பதாக உணர்கிறேன். அதனை தொடர்ந்து செய்யவும் நான் விரும்புகிறேன். வலுவான அணிகளை எதிர்கொள்ளும் போது நாம் மேம்படுத்த வேண்டிய பகுதிகளை அடையாளம் காண உதவும். அதனால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சவாலை எதிர்கொள்வதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்"என்றார்.
முன்னதாக இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள முகமது சிராஜ், அத்தொடரில் 23 விக்கெட்டுகளை கைப்பற்றி அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராகவும் இருந்தார். மேலும் இந்திய டெஸ்ட் அணிக்காக கடந்த சில ஆண்டுகளாகவே முகமது சிராஜ் முக்கிய பந்துவீச்சாளராகவும் செயல்பட்டு வருகிறார்.
அவர் இதுவரை இந்தியாவுக்காக 43 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், அதில் 133 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். இதில் 5 ஐந்து விக்கெட் ஹாலும் அடங்கும். இதனால் எதிர்வரும் தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரிலும் முகமது சிராஜ் இந்திய அணியின் முக்கிய வீரராக இருப்பார் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.