கொடைக்கானலில் பனியின் தாக்கம் அதிகரிப்பு: பிரையன்ட் பூங்காவில் மலர் செடிகளை பாதுகாக்க நிழல் வலை

கொடைக்கானலில் பனியின் தாக்கம் அதிகரிப்பு: பிரையன்ட் பூங்காவில் மலர் செடிகளை பாதுகாக்க நிழல் வலை

கொடைக்கானலில் பனியின் தாக்கம் நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில், பிரையன்ட் பூங்காவில் மலர் செடிகளை பனி பாதிக்காமல் இருக்க, நிழல் வலைகளை தோட்டக்கலைத் துறையினர் அமைத்து வருகி்ன்றனர்.

கொடைக்கானலில் வழக்கமாக டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை உறை பனிக்காலமாக இருக்கும். நடப்பாண்டில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் பரவலாக மழை பெய்தததால் உறை பனி குறைந்து, அடர்பனி மூட்டம் நிலவியது.

தினமும் அதிகரித்து வரும் பனிப்பொழிவால் கொடைக்கானல் காஷ்மீர் போல காட்சியளிக்கிறது. இதனால், உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பனியின் தாக்கத்தால் பயிர்களும் கருகி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இந்நிலையில், உறை பனியின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், நடவு செய்த மலர்ச் செடிகளைப் பாதுகாக்க தோட்டக்கலைத் துறை ஊழியர்கள் பிளாஸ்டிக் மற்றும் துணியால் ஆன நிழல் வலைகளைப் போர்த்திப் பாதுகாக்கத் தொடங்கியுள்ளனர். இதனால், பூங்கா முழுவதும் வெள்ளை மற்றும் பச்சைக் கம்பளம் போர்த்தியதுபோல் காட்சியளிக்கிறது.

இதுகுறித்து தோட்டக்கலை அதிகாரிகள் கூறுகையில், ‘கடந்த சில தினங்களாக பனியின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதில் மலர் கண்காட்சிக்காக நடவு செய்துள்ள செடிகள் பாதிக்காமல் இருக்க, மாலையில் நிழல் வலைகளால் செடிகளை மூடி பாதுகாக்கிறோம். மறுநாள் காலையில் பனியின் தாக்கம் குறைந்து வெயில் வரத் தொடங்கியதும் நிழல் வலையை அகற்றிவிடுவோம்’ என்றனர்.