பட்டியலினத்தவர் குறித்து சர்ச்சை பேச்சு: அதிமுக கோவை சத்யன் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவு!

பட்டியலினத்தவர் குறித்து சர்ச்சை பேச்சு: அதிமுக கோவை சத்யன் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவு!

பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக, அதிமுக செய்தித் தொடர்பாளர் கோவை சத்யன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய தமிழ்நாடு ஆதி திராவிடர், பழங்குடியினர் மாநில ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை (SIR) தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதற்கு ஆளும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சியில் இதுதொடர்பான விவாத நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. அப்போது அதிமுக சார்பில் கலந்து கொண்ட அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் கோவை சத்யன், பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளயாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

இந்த சூழலில், கோவை சத்யன் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யுமாறு காவல்துறைக்கு தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்தின் தலைவர் தமிழ்வாணன் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரசு எப்போதெல்லாம் புதிய சட்டத்தை கொண்டு வருகிறதோ, அப்போதெல்லாம் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்கள் நாங்கள் ஒதுக்கப்பட்டோம், பிதுக்கப்பட்டோம், நசுக்கப்பட்டோம் என்று கூச்சலிடுவதாக அதிமுக செய்தித் தொடர்பாளர் கோவை சத்யன் பேசியுள்ளார்.

ஒரு பொது விவாதத்தில், கோவை சத்யன் இவ்வாறு பேசியுள்ளார். இது, நம் நாட்டில் வாழும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களை இழிவுப்படுத்தும் வகையில் இருக்கிறது. அவரது பேச்சு வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989-இன் கீழ் தண்டிக்கத்தக்க குற்றாகும். எனவே, தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் சிறப்பு அமர்வு, தாமாக முன்வந்து கோவை சத்யன் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்கிறது.

அதன்படி, விவாத நிகழ்ச்சி நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி அமைந்துள்ள சரகத்தின் காவல் துணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர், கோவை சத்யன் மீது வன்கொடுமை சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுத்து, அதுதொடர்பான அறிக்கையாக நவம்பர் 10-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்" என உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனிடையே, இந்த சர்சசை தொடர்பாக கோவை சத்யன் தனது சமூக வலைதளத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில், “நான் திமுக அரசு மீதுதான் குற்றச்சாட்டை வைத்தேன். ஆனால், அந்த கருத்தை மடைமாற்றம் செய்து விசிக்கவும், திமுகவும் என் மீது சாதிய சாயம் பூச நினைக்கிறார்கள். எனது சொல்லாடலை கேட்டு மனம் வருந்தியவர்களுக்கு எனது வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.