பதிவு திருமணம் செய்யுமாறு கட்டாயப்படுத்திய காதலன் - காதலி எடுத்த விபரீத முடிவு

பதிவு திருமணம் செய்யுமாறு கட்டாயப்படுத்திய காதலன் - காதலி எடுத்த விபரீத முடிவு

பதிவு திருமணம் செய்யக் கோரி காதலன் அடித்ததால் மனமுடைந்த காதலி, காதலன் வீட்டிலேயே உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள ராஜேஸ்வரி அடுக்குமாடி குடியிருப்பில் ஹரிஷ் குமார் (25) என்பவர் தனது தாயுடன் வசித்து வருகிறார். மருந்து விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வரும் இவர், கடந்த சில வருடங்களாக நுங்கம்பாக்கம் புஷ்பா நகர் பகுதியைச் சேர்ந்த பூஜா (23) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். முதலாமாண்டு பிசியோதெரபி படித்து வந்த பூஜாவிடம், நேற்று முன்தினம் திருமணம் பற்றி பேச வேண்டும் எனக் கூறி சூளைமேட்டில் உள்ள தனது வீட்டிற்கு ஹரிஷ்குமார் அழைத்துள்ளார்.

பூஜா அன்று மதியம் ஹரிஷின் வீட்டிற்கு வந்து அவருடைய தாயார் செல்வியிடம் பேசிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் வீட்டிற்கு வந்த ஹரிஷ், தன்னை பதிவு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு, கல்லூரி படிப்பை முடித்து விட்டு திருமணம் செய்து கொள்ளலாம் என்று பூஜா கூறவே, ஆத்திரமடைந்த ஹரிஷ், அவரை கன்னத்தில் அடித்ததாக சொல்லப்படுகிறது.

இதனால் மனவேதனையடைந்த பூஜா, ஹரிஷ் வீட்டின் படுக்கையறைக்குச் சென்று கதவை பூட்டிக் கொண்டதாகவும், ஹரிஷின் தாயார் செல்வி வெகுநேரமாக கதவை தட்டியதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் பூஜா கதவை திறக்காததால், ஹரிஷும் செல்வியும் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மின்விசிறியில் தனது துப்பட்டாவால் அவர் தூக்கிட்டு தொங்கி கீழே விழுந்த நிலையில் கிடந்துள்ளார்.

பக்கத்து வீட்டில் வசிப்பவர்களின் உதவியோடு பூஜாவை ஆட்டோவில் ஏற்றி, கோடம்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறிவிட்டனர். உடனடியாக ஹரிஷ் சூளைமேடு பகுதிக்கு வந்து காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் பூஜாவின் உடலானது பிரேத பரிசோதனைக்காக கே.கே நகர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இச்சம்பவம் தொடர்பாக சூளைமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், ஹரிஷ் சூளைமேடு 110 வது வார்டு நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளராக இருப்பதும், பூஜாவின் தந்தை கண்ணன் பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினராக இருப்பதும் தெரிய வந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக பூஜாவின் காதலன் ஹரிஷை காவல் நிலையத்தில் வைத்து தற்கொலைக்கான காரணம் என்ன? இது கொலையா? என்பது போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.