என்னுடைய சினிமா பயணத்தை ’காந்தா’ படத்திற்கு முன், பின் என பிரிக்கலாம் - நடிகர் சமுத்திரக்கனி
என்னுடைய சினிமா பயணத்தை 'காந்தா' படத்திற்கு முன், காந்தா படத்திற்கு பின் எனப் பிரிக்கலாம் என நடிகர் சமுத்திரக்கனி கூறியுள்ளார்.
ஸ்பிரிட் மீடியா மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் துல்கர் சல்மான், ராணா டகுபதி, பிரசாந்த் பொட்லூரி, ஜோம் வர்கீஸ் ஆகியார் தயாரித்துள்ள திரைப்படம் ‘காந்தா’. இப்படம் வரும் நவம்பர் 14ஆம் தேதி வெளியாகிறது. செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர்கள் துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இத்திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இவ்விழாவில் இயக்குநர் செல்வமணி பேசும்போது, "எனக்கு சிறுவயதில் இருந்தே சினிமா பார்க்க பிடிக்கும். எந்தப் புத்தகமும், தனிமனிதனும் சொல்லித் தராத பல விஷயங்களை சினிமா கற்றுக் கொடுத்தது. சினிமா நான் விருப்பப்பட்டு பற்றிக்கொண்ட ஆசான். அதனால் என்னுடைய முதல் படமே சினிமா பற்றியதாக எடுத்துக் கொண்டேன். 1950களில் இருந்த ஆளுமைகள், அவர்களுக்குள் இருந்த மனப்போராட்டம் ஆகியவற்றை வடிவமைத்து படமாக்கி இருக்கிறேன்.
என்னைவிட இன்னும் அதிகம் சினிமாவை நேசித்த ஒரு அணி இருந்ததால் தான் என்னால் இந்தப் படத்தை சாத்தியமாக்க முடிந்தது. 2016இல் நான் எழுதிய கதையை 2019இல் ராணாவிடம் கூறியபோது அவருக்கு உடனே பிடித்துவிட்டது. அவர் என் கதையை நம்பியதால் தான் ‘காந்தா’ திரைப்படம் தொடங்கியது. அய்யா கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி சிறப்பான நடிப்பைக் கொடுத்துள்ளார்" என்றார்.
நடிகர் சமுத்திரக்கனி பேசும்போது, "என்னுடைய சினிமா பயணத்தை ‘காந்தா’ படத்திற்கு முன், பின் எனப் பிரிக்கலாம். ‘சுப்ரமணியபுரம்’ டிரெய்லர் வெளியாவதற்கு முன்பு எனக்கு காய்ச்சல் வருவதுபோல் இருந்தது. அதேபோன்ற உணர்வு இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டிற்கு முன்பும் இருந்தது. சில படங்கள் அப்படியான மேஜிக் செய்யும். காலத்தால் அழிக்க முடியாத இதுபோன்ற படங்களில் நான் இருப்பது பெருமை. என் பிள்ளை மகாதேவன் (துல்கர் சல்மான்), குமாரி(பாக்யஸ்ரீ), என் தம்பி ராணா, செல்வாவுடன் பயணப்பட்டது பெருமை" என்றார்.
விழாவில் நடிகர் துல்கர் சல்மான் பேசும்போது, "இந்தப் படத்தின் கதையை 2019இல் தான் கேட்டேன். தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக இயக்குநர் செல்வா இருப்பார். எங்கள் அனைவருக்கும் தமிழில் மிக முக்கியமான படமாக ‘காந்தா’ இருக்கும். ‘அய்யா’ கதாபாத்திரத்தில் எங்களை விட அதிக ஆர்வமாக சமுத்திரக்கனி இந்தப் படத்தில் நடித்துக் கொடுத்துள்ளார்” எனக் கூறினார்.
நடிகை பாக்கியஸ்ரீ பேசுகையில், " 'காந்தா' எனக்கு ரொம்பவே ஸ்பெஷல் படம். என்னைப் போலவே இந்தப் படம் பார்த்ததும் உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். துல்கர் சல்மான் நடிக்கிறார் என்றதும், அவருக்கு ஈடு கொடுத்து எப்படி நடிக்கப் போகிறேன் என்ற பதற்றம் இருந்தது. ஆனால் எனக்கு முழு ஆதரவு கொடுத்தார். என்னைக் கண்டுபிடித்து வாய்ப்பு கொடுத்த ராணாவுக்கு நன்றி. ‘காந்தா’ படம் மூலம் தமிழில் அறிமுகமாவது எனக்கு பெருமை” என்றார்.