கொள்கை எதிரி பாஜகவுடன் கூட்டணியா.. ஒருநாளும் வாய்ப்பு இல்லை.. தவெக நிர்வாகி நிர்மல் குமார் பதிலடி!
கொள்கை எதிரியான பாஜகவுடன் ஒருநாள் கூட்டணி என்ற பேச்சிற்கே இடமில்லை என்று தவெக துணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். தவெக தொடங்கப்பட்ட முதல் நாளில் இருந்தே இதுதான் எங்களின் நிலைப்பாடு என்று கூறிய அவர், அந்த நிலைப்பாட்டில் இருந்து ஒருநாளும் தவெக மாறாது என்றும் கூறியுள்ளார்.
தவெக தலைவர் விஜய் அரசியல் கட்சி தொடங்கிய முதல் மாநாட்டிலேயே கொள்கை எதிரியாக பாஜகவையும், அரசியல் எதிரியாக திமுகவையும் அறிவித்தார். ஆனால் விஜய்யின் ஒவ்வொரு பொதுக்கூட்டம், பிரச்சாரத்தின் போதும் திமுகவை விமர்சிக்கும் அளவிற்கு பாஜகவை விமர்சிக்காமல் தவிர்த்து வந்தார். குறிப்பாக கரூர் விவகாரத்திற்கு பின் விஜய் ஒருமுறை கூட பாஜக என்ற பெயரை உச்சரிக்கவில்லை.
புதுச்சேரிக்கு சென்ற போது கூட ஒன்றிய அரசு என்று விமர்சித்த விஜய், பாஜக என்று கூறாமல் அமைதி காத்தார். இந்த நிலையில் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ்க்கு பின் விஜய் பல்வேறு பொதுக்கூட்டம் மற்றும் பிரச்சார பயணங்களுக்கு திட்டமிட்டிருந்தார். ஆனால் சென்சார் சான்றிதழ் அளிக்கப்படாமல் ஜனநாயகன் படம் ரிலீஸாகவில்லை.
இதற்காக ராகுல் காந்தி தொடங்கி ஸ்டாலின் வரை அத்தனை கட்சியினரும் குரல் கொடுத்து பாஜகவை விமர்சித்துள்ள போதும், விஜய் மட்டும் அமைதி காத்து வருகிறார். மறுமுனையில் கரூர் விவகாரத்தை கையில் எடுத்துள்ள சிபிஐ, டெல்லிக்கு விஜய்யை வரவழைத்து சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தி இருக்கிறது. ஏற்கனவே தவெக நிர்வாகிகளிடம் 3 நாட்களாக சுமார் 20 மணி நேரம் வரை விசாரணை நடத்தப்பட்டது.
20 மணி நேரத்தில் சுமார் 15 மணி நேரம் வரை தவெகவின் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல் குமார், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் காத்திருக்க வைக்கப்பட்டிருக்கின்றனர். இதனால் தவெக நிர்வாகிகளை மனதளவில் நிலைகுலைய வைக்க சிபிஐ விசாரணை என்ற பெயரில் பாஜக அலைக்கழித்து வருவதாக விமர்சனங்கள் எழுந்தன.
இதனிடையே என்டிஏ கூட்டணியில் தவெகவை கொண்டு வர எடப்பாடி பழனிசாமி மற்றும் அமித்ஷா இருவருமே தொடக்கம் முதலே தீவிரம் காட்டினர். ஆனால் விஜய் கொஞ்சம் கூட பிடி கொடுக்கவில்லை. இதனால் சிபிஐ விசாரணை மூலமாக விஜய்யை கட்டுப்பாட்டில் எடுக்க பாஜக முயற்சிப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறத் தொடங்கினர்.
அதேபோல் திமுக - காங்கிரஸ் இடையில் தொகுதி பங்கீடு மற்றும் ஆட்சியில் பங்கு ஆகியவற்றில் சுமூகமான சூழல் இல்லை. இதனால் தவெகவை நோக்கி காங்கிரஸ் கட்சி சென்றால், அது ஆளுங்கட்சியான திமுக கூட்டணியை பலவீனப்படுத்தும். ஆனால் அது காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கை தமிழ்நாட்டில் உயர்த்தும் என்றும் அமித்ஷா கணக்கு போட்டுள்ளார்.
எப்படி இருந்தாலும் திமுகவுக்கு எதிரான வலுவான எதிர் அணியை உருவாக்க அமித்ஷா முடிவு எடுத்துள்ளார். இப்படியான சூழலில் டெல்லியில் சிபிஐ விசாரணைக்கு பின் சென்னை திரும்பிய தவெக நிர்வாகி சிடிஆர் நிர்மல் குமார் பேசுகையில், பாஜக எங்களின் கொள்கை எதிரி.. ஒருநாளும் அவர்களுடன் கூட்டணி என்ற பேச்சிற்கே இடமில்லை. முதல் நாள் முதலே எங்களின் நிலைப்பாடு அதுதான். அதில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.