மாதவனின் அடையாளத்தை பயன்படுத்த தடை - டெல்லி உயர்நீதிமன்றம்

மாதவனின் அடையாளத்தை பயன்படுத்த தடை - டெல்லி உயர்நீதிமன்றம்
இந்திய சினிமா-வில் முக்கிய நடிகர்களுள் ஒருவராக திகழும் மாதவனின் தனிப்பட்ட அடையாளங்களை அனுமதியின்றி யாரும் பயன்படுத்தக்கூடாது என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐஸ்வர்யா ராய், நாகார்ஜூனா, அபிஷேக் பச்சன் உள்ளிட்ட பல பிரபலங்கள் ஏஐ மூலம் தங்கள் அடையாளங்களை பயன்படுத்துவது, அனுமதியின்றி வணிக ரீதியான பயன்பாடு உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்க நீதிமன்றத்தை நாடினர்.
இவர்கள் வரிசையில் நடிகர் மாதவன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக மனு தாக்கல் செய்தார். அத்துடன் டீப் பேக், ஏஐ மூலம் போலியாக உருவாக்கப்பட்ட திரைப்பட முன்னோட்டத்தையும் மாதவன் தரப்பு தாக்கல் செய்தது. இந்த வழக்கு நீதிபதி மன்மீத் பிரீதம் சிங் அரோரா முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே சமூக வலைதள நிறுவனங்களிடம் முறையிட்டுள்ளதாக மாதவன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வாதத்தை கேட்ட நீதிபதி, மாதவனின் பெயர், புகைப்படம் உள்ளிட்ட தனிப்பட்ட அடையாளங்களை அனுமதியின்றி பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் இது போன்ற பதிவுகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.