ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026: பின்னடைவை சந்தித்த ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா
ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பின்னடைவை சந்தித்துள்ளன.
ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் பிப்ரவரி 7ஆம் தேதி முதல் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. மேலும் இந்த தொடரில் பங்கேற்கும் அணிகளை அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன.
அந்த வகையில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தன. இதில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டனாக ஐடன் மார்க்ரமும், ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக மிட்செல் மார்ஷும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தொடருக்கு முன்னதாக இரு அணியும் பின்னடைவை சந்தித்துள்ளது.
அதன்படி ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் பாட் கம்மின்ஸ் காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் நிலையில், எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் முதல் சில போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்று கூறப்படுகிறது. இதனை ஆஸ்திரேலிய அணியின் தேர்வு குழு தலைவர் ஜார்ஜ் பெய்லியும் உறுதி செய்துள்ளார்.
இது குறித்து பேசிய ஜார்ஜ் பெய்லி, ”பாட் கம்மின்ஸ் காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாததன் காராணமாக, டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் மூன்று அல்லது நான்கு போட்டிகளை அவர் விளையாடமாட்டார்" என்று கூறியுள்ளார். முன்னதாக அவர் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின் போது கம்பேக் கொடுத்திருந்தார்.
ஆனால் அதன்பின் அவர் மீண்டு காயத்தை சந்தித்த காரணத்தால், அந்த தொடரின் எஞ்சியிருந்த போட்டிகளில் இருந்து விலகி இருந்தார். இருப்பினும் அவருக்கு டி20 உலகக் கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் அவர் தொடரில் பங்கேற்பாரா? என்ற சந்தேகங்களும் அதிகரிக்க தொடங்கியுள்ளன.
அதே போல் தென்னாப்பிரிக்க அணியைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் டோனவர் ஃபெரீராவும் காயம் அடைந்துள்ளார். நடைபெற்று வரும் எஸ்.ஏ.20 லீக் தொடரில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஃபெரீரா, பிரீட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது பவுண்டரியை தடுக்கும் முயற்சியில் காயம் அடைந்தார்.
அதன் பின் அவர் களத்தை விட்டு பாதியிலேயே வெளியேறியதுடன், மருத்துவமனைக்கும் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனையின் முடிவில் அவரது காயம் தீவிரமாக இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் அவர் எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்பாரா? என்ற சந்தேகமும் அதிகரித்துள்ளது.
ஒருவேளை அவர் தொடரிலிருந்து விலகும்பட்சத்தில் அவருக்கு பதிலாக மேத்யூ பிரீட்ஸ்கே அல்லது டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோரில் ஒருவருக்கு தென்னாப்பிரிக்க அணியில் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரையில் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
டி20 உலகக் கோப்பைக்கான அணிகள்
தென்னாப்பிரிக்கா அணி: ஐடன் மார்க்ராம்(கேப்டன்), குயின்டன் டி காக், டோனி டி ஜோர்ஜி, டெவால்ட் பிரேவிஸ், டேவிட் மில்லர், டொனோவன் ஃபெரீரா, மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, குவேனா மபாகா, லுங்கி இங்கிடி, ஜேசன் ஸ்மித், ஜார்ஜ் லிண்டே, கார்பின் போஷ், ஆன்ரிச் நோர்ட்ஜே.
ஆஸ்திரேலிய அணி: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சேவியர் பார்ட்லெட், கூப்பர் கோனோலி, பாட் கம்மின்ஸ், டிம் டேவிட், கேமரூன் கிரீன், நாதன் எல்லிஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மேத்யூ குஹ்னேமன், க்ளென் மேக்ஸ்வெல், மேத்யூ ஷார்ட், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆடம் ஜாம்பா