கரூரில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்காத விஜய் மனிதாபிமானம் உள்ளவரா? - அமைச்சர் துரைமுருகன்
கரூரில் பாதிக்கப்பட்டவர்களையே நேரில் சென்று சந்திக்காக விஜய், முதலமைச்சரை பார்த்து மனிதாபிமானம் இல்லாதவர் என கூறுவதாக அமைச்சர் துரைமுருகன் சாடினார்.
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று (நவ.9) காட்பாடி காந்திநகர் பகுதியில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து பதிலளித்தார்.
அப்போது செய்தியாளர்கள் அவரிடம், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "என்ன பூச்சாண்டி காட்டினாலும் நான் அஞ்ச மாட்டேன்" என்று கூறியதைக் குறித்து கேட்டபோது, “அவருடைய நிலைமையை அவர் தெரிவிக்கிறார். ஆனால் சட்டம் என்ன சொல்கிறதோ, அதைத் தமிழக அரசு செய்து காட்டும். சட்டத்தின் முன் யாரும் மேலானவர்கள் இல்லை,” எனத் தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், “முதல்வர் உச்சபட்ச அதிகார மயக்கத்தில் மனிதாபிமானம், மாண்பு இல்லாமல் அரசியல் ஆதாயம் தேடுகிறார்” எனக் கூறியதைக் குறித்த கேள்விக்கு, “கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தனர். அந்த இடத்திற்கே போய் ஆறுதல் சொல்லாமல் இருந்தவர் விஜய். ஆகையால், அவர் மனிதாபிமானம் இல்லாதவரா? இல்லை நாங்கள் மனிதாபிமானம் இல்லாதவர்களா? நாங்கள் எப்போதும் மக்களுடன் நிற்கும் கட்சி” என்றார்.